2003 !

இனி எத்தனை வருடங்கள் உயிர் வாழ்ந்தாலும் , 2003 போல் ஒரு வருடம் திரும்ப வருமா தெரியாது .

11 வகுப்பில் ஒப்புக்கு சப்பான் பரீட்சை எழுதி, பாஸ் ஆகி , 12ம் வகுப்பில் அடியெடுத்து வைத்த வருடம் 2002 .

அப்பா காசு, எந்த கவலையும் கிடையாது, டியூஷன் போகிறேன் என்று சொல்லி விட்டு , நண்பர்களை அப்பாவின் சிகப்பு TVS suzuki வண்டியில் ஏற்றிக்கொண்டு ட்ரிப்பிள்ஸ் போகும்போது , முனை ஓரத்தில் சேட்டன் வைத்திருக்கும் ராஜதானி பேக்கரியில் வேலை செய்யும் ஒருவர் ” நீ போற ஸ்பீடுக்கு , ஒரு நாள் இந்த பேக்கரி முன்னாடி விழுந்து வாரப் போற பாருடா! ” என்று சொல்வதை காதில் கேட்டு, எகத்தாளமாய் புன்னகைத்து கடப்பேன் (பின்னாளில் அவர் சொன்ன மாறியே அம்மாவை வைத்து மெதுவாய் ஓட்டி சென்ற போது , பெருசு ஒன்று வண்டிக்கு முன் வர, பிடிக்காத பிரேக்கை பிடிக்க போய் பேக்கரி முன் குப்புற விழுந்து , புது வாட்சை உடைத்து, கையில் கட்டுடன் வீடு திரும்பிய நினைவு ) .

டியூஷன் எப்போதும் போனதில்லை, நண்பர்களை டிராப் செய்து விட்டு, வருவோர் போவோரிடம் அரட்டை அடித்து விட்டு, மறுபடியும் அவர்களை டிராப் செய்து விட்டு, அரை பிரேக் மட்டுமே பிடிக்கும் பைக்கை வேணுமென்றே வீட்டு சுவற்றில் மோதி நிறுத்தி ( பைக் ஒருநாள் உடையும், அப்பா புது பைக் வாங்குவார் என்ற கனவில் ) , ஜாலியாய் , ஸ்கூல் கேட் இழுத்தும் மூடும் சில நொடிகளுக்கு முன் உள்ளே சென்று தொடங்கியது 12ம் வகுப்பு .

கம்ப்யூட்டர் க்ரூப் நான். அந்த கருமத்தை எடுக்க எனக்கு எந்த இஷ்டமும் இல்லை, 10ம் வகுப்பில் 1100க்கு எடுத்த 831 மார்க்கால் அங்கே தள்ளப் பட்டேன் . காமெர்ஸ் க்ரூப் போக வேண்டும் என்பது கனவு ! இந்த கம்ப்யூட்டர் , பயாலஜி க்ரூப் படித்த மாணவர்கள் அத்தனை பேரும் ரேஸ் குதிரைகள் . அத்தனை பேர் பெற்றோருக்கும் சன் டிவி செய்திகளில் வரும் என்ஜினீயர் / டாக்டர் போல் தன் மகள் / மகன் ஆக வேண்டும் என்பது ஒற்றை கனவு . இதற்க்கு என்ன செய்யவும் அவர்கள் தயார் . பிள்ளைகள் சொன்னதை செய்ய வேண்டும் , அவர்களுக்கு அந்த 2 வருடம் உணர்ச்சிகள், ஆசைகள் தேவை இல்லை என்று அவர்களாகவே முடிவு செய்து வைத்திருந்த கால கட்டம் அது .

சிமெண்ட் சீட் , பேன் கூட இல்லாத அந்த வகுப்புக்குள் நுழையும்போதே ஜெயிலுக்குள் நுழைந்தது போல உணர்வேண் . வாத்தியார் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமான அரக்கன்கள் – சொல்லி தரும் இன்பத்தை விட, பசங்களை முன்னே நிறுத்தி பெண்கள் சிரிக்க அடிப்பதில் அவனுங்களுக்கு அலாதி பிரியம் . சில நாட்கள் ஸ்கேலில் அடி விழும், சில நாட்கள் கொடிக்கம்பத்திற்க்கு அருகே வளரும் சவுக்கு மரத்தில் இருந்து முறிக்கப்படும் சவுக்கில் அடி விழும் . 10ம் வகுப்பு படிக்கும் பொது, இப்படி கெமிஸ்ட்ரி வாத்தியான் அடித்ததில் வந்த ரத்தம் இறக்கும் வரை மறக்காது. இன்று போல சோசியல் மீடியாக்கள் இருந்து இருந்தால், வாத்தியான்களில் பாதிப் பேர் சிறையில் இருந்து இருப்பார்கள் . இன்றைக்கு சிறுபான்மையினர் இந்த நாட்டில் எப்படி அடைபட்டது போல் உணர்கிறார்களோ, அதைப் போல உணர்ந்தேன் அந்த 12ம் வகுப்பில். ஒவ்வொரு நாளும் நரகமாய் கடக்கும், கொஞ்சம் கொஞ்சமாய் படிப்பில் நாட்டம் குறையத் தொடங்கியது .

அரை பரீட்சை ரிசல்ட் . பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி , மேத்ஸ் – மூணுலயும் பெயில் . இதோடு வாழ்க்கை முடிந்தது என்பது போல் உணர்வு. அதற்க்கு காரணம் அப்பா !

எம் டென் மகன் படத்தை அப்பாவை பார்த்த பின் எடுத்து இருப்பாரா இயக்குனர் என்று இன்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . அதே மீசை, அதே இரக்கமற்ற மனசு, அதே அடி – அது தான் அன்றைய அப்பா ! மனுஷன் வீட்டை விட்டு போகும்போது கேட்கும் பைக் சத்தம் , நெஞ்சில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க விடும் . சுத்தமாய் பிடிக்காது அவரை, இந்த மூன்லயும் பெயில் ரிசல்ட்டை அவரிடம் காண்பித்தால் நிச்சயம் அடித்தே கொன்று விடுவார் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை .

ஆக – இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் ? யோசிக்கத் தொடங்கினேன் . நன்றாய் தெரிந்த ஒரு விஷயம் – நிச்சயம் 12வதில் பெயில் ஆகி விடுவேன் என்பது . சரி இதை கடந்தே ஆக வேண்டும் என்ன செய்ய . யோசித்து யோசித்து செய்த முடிவு – வீட்டை விட்டு எங்காவது ஓடிப் போவது ! எங்கே செல்வது ? கிடைத்த பஸ் போகும் இடத்திற்கு .

ஒரு அருமையான காலையில் , ஸ்கூல் பீஸ் கட்ட 700 ரூபாய், சில புத்தகங்கள் , ஸ்போர்ட்ஸ் பீரியடுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி ஒரு பொசு பொசு பச்சை டிசர்ட், அம்மா செய்து கொடுத்த , வெங்காயம் நிறைய போட்டிருக்கும் தாளிச்ச தயிர் சாப்பாட்டுடன் தொடங்கினேன் என் வாழ்க்கையை மாற்றும் பயணத்தை !

2002 ல் இருந்து வருடம் 2003 ஆகி இருந்தது , பொங்கலுக்கு சில நாட்களே இருந்த தரும் அது . அவிநாசியில் இருந்து கிளம்பி நேராய் திருப்பூர் புதிய பஸ்ஸ்டாண்ட் வந்தடைந்தேன் . அங்கே தான் நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் . எங்கே செல்வது என்று தெரியவில்லை , அப்போது என்னை க்ராஸ் ஆகி வந்து நின்றது மதுரை செல்லும் பேருந்து , மதுரைக்கு நான் பிறந்ததில் இருந்து சென்றதே இல்லை, சரி போய் தான் பாப்போம் என்று சொல்லியது மனது .

மனம் விடுதலை வேண்டியது, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் போது எப்படி மனம் இந்த உலக ஆசா பாசங்களில் இருந்து விடுபட்டு இருக்கிறதோ, அது போல் ஒரு விடுதலையை வேண்டியது . கட்டம் கட்டமாய் இருக்கும் பச்சை கலர் ஸ்கூல் சர்ட்டை பஸ்ஸ்டாண்டின் ஒரு ஓரத்தில் நின்று கழட்டி வைத்து விட்டு , டீசர்டை மாற்றினேன் . காரணம் – ஸ்கூல் டிரஸ் போட்டு இருந்தால் அதில் எம்பிராய்டர் செய்து இருக்கும் ஸ்கூல் லோகோ மட்டும் முகவரியை பார்த்து சிலருக்கு சந்தேகம் வந்து விடும் என்பதால் !

மதுரை பேருந்து நிலையம் வந்த உடன் ஒருவர் என்னை பிக் பாக்கெட்டுகள் பற்றி எச்சரித்தார் . பீஸ் கட்டும் கார்டுக்கு நடுவே சிக்கி இருந்த 700 ருபாய் குறைந்து 500 ஆகி இருந்தது, பத்திர படுத்திக் கொண்டேன். ஒரு ஆட்டோ பிடித்து அந்த மதியத்திற்கு பின்னான வேளையில் மீனாட்சி அம்மன் கோயில் வந்தடைந்தேன் . ஒரே பசி – அம்மா கொடுத்த விட்டிருந்த தாளிச்ச தயிர் சாதத்தை நல்லா சாப்பிட்டேன், நிம்மதியாய் சாப்பிட்டேன் ரொம்ப நாளுக்கு அப்புறம் (இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நடுநிசியில் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு எழுதுகிறேன் என்பது ஒரு சுமாரான கோ இன்சிடன்ஸ் ) .

மீனாட்சி அம்மனை முதல் முதலில் கண்டேன், மூக்குத்தி ஜொலிக்க அம்மன் அழகாய் அமர்ந்து என்னை பார்த்து சிரித்தாள், வெளியே வந்தவுடன் என்னை அறியாமல் கண்ணீர் . அடக்கிக்கொண்டு , நாயக்கர் மகால் சென்றேன் , நிகழ்ச்கிகளை கண்டு களித்தேன் , கிட்ட தட்ட இரவு ஆகி இருந்தது .

கட் – என் வீடு .

பய்யன் காணாமல் போய் விட்டான் என்பது கிட்ட தட்ட உறுதி ஆனாது பெற்றோருக்கு. அம்மா அழ ஆரம்பித்து இருந்தார்கள் , அப்பா வியாபாரம் செய்து கொண்டு வந்த 50,000 ரூபாயை அப்படியே அவர் நண்பர்களிடம் கொடுத்து என்னை தேடத் தயாரானார்கள் .

மதுரை …

இரவாகி இருந்தது , கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் பயம் கவ்வத் தொடங்கியது . தங்க ஏதோ ஒரு இடம் இருந்தால் போதும் என்று தேடத் தொடங்கினேன் . சிறு நகரத்தில் வளர்ந்தவன் நான் , பெரும் நகரம் மதுரை என்னை அச்சுறுத்தியது . லாட்ஜுகளில் சென்று ரூம் கேட்டேன், என் மூஞ்சியை பார்த்ததும் அவர்களுக்கு சந்தேகம் எழ தொடங்கியது, விசாரிக்க ஆரம்பித்தார்கள் , தெளிவாய் சில பதில்கள் தந்து அங்கிருந்து எஸ்கேப் ஆனேன் , மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் .

நேராய் ஒரு பெரிய தியேட்டருக்கு சென்றேன், எதோ ஒரு டப்பிங் படம், தூக்கம் சொக்கியது, பார்த்துக்கொண்டே அசந்து கொஞ்சம் தூங்கினேன். படம் முடிந்தது, வெளியே வந்து எங்காவது படுத்துக்கொள்ளலாம் என்று ஒரு தள்ளு வண்டி அருகே படுக்கச் சென்றேன். பக்கத்தில் நின்று இருந்த ஒரு அண்ணன் ” இங்க படுத்தேன்னா , காலைல போலீஸ் ஸ்டேஷன்ல தான் எந்திரிப்ப தம்பி ! ” என்றார் . பக்கென்றது மனது , நேராய் தியேட்டர் வெளியே நின்று இருந்தே ஒரே ஒரு ஆட்டோவை பிடித்தேன், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டென்ட் வந்து அடைந்தேன் . எனக்காகவே சென்னை செல்லும் ஒரு வண்டி காத்து இருந்தது .

சென்னை எல்லாவறையும் அழைப்பதில்லை, அரவணைப்பதில்லை . என் கஷ்டம் என் அன்னை சென்னைக்கு புரிந்து விட்டதோ என்னவோ, ” வண்டி ஏறுடா , உன் வாழ்க்கையை நான் மாத்தி விடுறேன் ” என்று அழைத்தாள் .

விடியல் – சுமார் ஒரு 11 மணிக்கு , இன்றிருக்கும் பாரிஸ் கார்னரில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது பேருந்து . கையில் இருக்கும் பணம் முந்நூறாக குறைந்து இருந்தது . நேராய் சென்ட்ரல் ஸ்டேஷன் தேடி நடந்தே சென்றேன். சென்னையில் எனக்கு தெரிந்த ஒரே இடம் அதுதான். 11ம் வகுப்பு படிக்கும் போது கல்கத்தாவிற்கு ஆன்மீக சுற்றுலா ரயிலில் அழைத்துச் சென்றார்கள் . அப்போ சென்னையில் சில மணி நேரம் இருந்தோம் ரயில்கள் மாற, அன்று பார்த்த சென்ட்ரல் . வெளியே வந்து கூட்டத்தை பார்த்ததும் நெஞ்சே நின்றது . அப்போது தெரிந்த ஒன்று, அந்த ரயில் நிலையத்தில் ஒரு இன்டர்நெட் சென்டர் இருப்பது , sify இன்டர்நெட் என்பது நினைவு. அந்த சென்டரை தேடிப்பிடித்தேன் . அங்கிருந்து என் பள்ளி நண்பன் வினோத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன் – நான் பரிட்சையெல்லாம் முடித்து வருவதாய் , அதற்க்கு மேலும் நிறைய எழுதினேன், என்ன எழுதினேன் என்று மறந்து விட்டது .

ஈமெயில் எழுதி அனுப்பி விட்டு, அந்த மட்ட மத்யானத்தில் வெளியே வந்து நேரா ஒரு ஆட்டோ டிரைவரிடம் சென்று ” வேலை இருக்குமான்னா ” என்றேன். ” எந்த ஊரு பா நீ ? இங்க அவன் அவனே ஆட்டோ ஓட்டி லோல் படுறான், கம்முன்னு எந்த ரயில்ல வந்தியோ , அதுலயே உன் ஊர் போயி சேறு இன்னா ! ” என்றார் . அவரை விட்டு இன்னொரு டிரைவரிடம் சென்றேன் – அவர் பெயர் ராம மூர்த்தி , வேலை கேட்டவுடன் , என்னை முழுதாய் பார்த்தார் ” சரி வா பா , வேலை இருக்கு ” என்றார் . அவர் என் கையில் இருக்கும் ஒரு பவுன் மோதிரத்தை பார்த்தார் என்பது எனக்கு அன்று தெரியாது .

நேராய் திருவான்மியூர் போனோம். அங்கே ராம மூர்த்தியுடைய நண்பர் சிவா அறிமுகம் ஆனார் . இருவரும் ஆட்டோ டிரைவர்கள் , மற்றும் ஏரியா ரவுடிகள் – இதை அவர்கள் தான் சொன்னார்கள் . கடைசி வரை ரவுடிக்கான எதையும் அவர்கள் செய்து நான் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம் .

சிவா என்னை ஆட்டோவில் அமர்த்தி கந்தன் சாவடியில் இருந்த ஒரு குடிசைக்கு அழைத்து சென்றார் . அது ஒரு கான்க்ரீட் கட்டிடத்திற்கு மேல் இருந்த கூரை , ஒரு பாய், பழைய பெட்டி ஒன்று,காலிக்குடங்கள் – இவ்ளோ தான் அந்த கூரைக்குள். தன் வைப்பாட்டியை இரவில் அழைத்து வந்து மகிழ்ச்சியாய் இருக்க சிவா உபயோகித்த இடம் என்பது எனக்கு பின்னாளில் தெரிந்தது . கையில் இருக்கும் காசு நூறுக்குள் கீழ் வந்து இருந்தது .

அடுத்த நாள் காலை , பல் விளக்கும் பவுடர் வாங்கினேன். பழைய குடம் ஒன்றை கழுவி, தண்ணீர் பிடித்து வைத்தேன். சிவா வந்தார் , திருவான்மியூர் சென்றோம், அயன் கடைக்காரரிடம் ஒரு நல்ல வெள்ளை சட்டை சில மணி போட்டுக்க கேட்டார் , வாங்கி எனக்கு தந்தார் .சட்டை போட்டுகொண்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருகே இருக்கும் ஒரு கடைக்குப் போனோம்.

கடைக்கு பின்னே ஒரு பிரின்டிங் பிரஸ் , அங்கே கல்யாண பத்திரிக்கை முதல் விசிட்டிங் கார்ட் வரை அனைத்தும் அடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது . என் வாழ்வின் முதல் வேலையில் 1400 ரூபாய் சம்பளத்திற்கு என்னை சேர்த்தி விட்டார் சிவா.

காசி , குணா , ஷாஜகான் , நான் , மற்றும் ஸ்டேசனரியை பார்த்து கொள்ளும் ஒரு பெண் . அவள் பெயரும் முகமும் மறந்து விட்டது .

காசி ஒரு தீவிர அஜித் பேன், ரெட் பட கேசட் என்றும் அவனிடம் இருக்கும், ஷாஜகான் ஒரு தீவிர விஜய் பேன், ஷாஜகான் பட கேசட் என்றும் அவனிடம். இவர்களுக்கு இடையேயான போட்டி, யார் முதலில் டேப் ரெக்கார்டரில் கேசட்டை முதலில் போடுவது என்று . நகம் பெரிதாய் வைத்து இருப்பார் குணா ! சந்து பற்கள், ஒல்லியான உருவம், பொய் இல்லாத சிரிப்பு .

தினமும் பேட்டா ஐந்து ரூவாய். என்னிடம் இருந்த காசு சுத்தமாய் கரைந்து இருந்தது , கையில் போட்டு இருந்த மோதிரத்தை திரும்ப வராது என்று தெரிந்தே சிவாவிடம் தந்தேன், அவர் கேட்டதால். அப்பா காசில் பிழைக்கக் கூடாது என்ற தீர்க்கமான முடிவால் . அதனால் உயிரே போனாலும் பரவா இல்லை என்றது மனது .

சில நாட்கள் வேலை .

சிவா ,இரவு மட்டும், கடைசி சவாரியில் வரும் காசில் எனக்கு பிரியாணி வாங்கித் தருவார் , மதியம் சாப்பிடும் போண்டாவும் டீயும், இரவு சிவா வாங்கித் தரும் உணவுமே அன்றைக்கான உணவு. அதிலும் கல் விழுந்தது, பொங்கல் விடுமுறைகள் வந்தது .

3 நாள் விடுமுறை , கந்தன் சாவடிக் கூரைக்குள் அடைக்கலமானேன் . இருந்த 10 ரூவாய் சொச்சத்தில் ஒரு நாள் ஓட்டினேன் . அடுத்த இரண்டு நாட்கள் தண்ணீர் மட்டுமே உணவு.

அந்த பழைய பெட்டிக்குள் யாரோ விட்டு சென்று இருந்த சிகப்பு துண்டு ஒன்று , மூன்றாவது நாள் மதியம் என்று நினைக்கிறேன் – தண்ணீரை வைத்து துண்டை நன்றாய் நனைத்து இடுப்பில் காட்டினேன் . கண்ணீரெல்லாம் காணாமல் போய் இருந்தது, இடுப்பில் ஈர துண்டை இருக்கக் காட்டினால் பசி பறந்து போகும் என்று என் மூளைக்குள் ஏத்திய என் தமிழ் வாத்தியாருக்கு நன்றிகள் சொல்லிக் கொண்டேன் அன்று. வாழ்வில் முதல் முறையாய் பசி எப்படி இருக்கும் என்று உணர்ந்தது பொங்கல் – 2003ல் !

அடுத்த நாள் !

அரை மயக்கமாய் , நடந்தே கந்தன் சாவடியில் இருந்து திருவான்மியூர் சென்று அடைந்தேன் வேலைக்கு. வேலை செய்ய முயன்றாலும் பசி என்னை கொன்றது , மதியம் வந்தது . சிவாவும் , காசியும் மருந்தீஸ்வரனாக மாறி அவர்களுக்கு வழங்கப்பட்ட போண்டாவை எனக்குத் தந்தார்கள் , என் பசி நிறைந்த கண்கள் பார்த்து . என்றைக்காவது அவர்களை தேடிப் பிடித்து, உலகத்திலேயே விலை உயர்ந்த உணவை வாங்கி கொடுக்க ஆசை .

நான் பசியில் அவதி படுவதை உணர்ந்த சிவா, அவர் ஆட்டோ ஸ்டான்ட் அருகே இருந்த ஹோட்டலில் எனக்கு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி தந்தார் . 8 ரூவாய்க்கு வயிர் நிறைய தக்காளி சோறு, என்ன பார்த்த உடன் அந்த சர்வர் எனக்காக கொஞ்சம் அதிகமாய் போடுவார் , நான் நிறைய கடவுள்களை மிக அருகில் பார்த்த காலங்கள் அவை .

பசிக்கு ஒரு வழியாய் விடை, ஆனால் கொசுவுக்கு இல்லை . அந்த கந்தன் சாவடி குடிசை ஒரு சாக்கடைக்கு அருகே, குறைந்தது ஒரு 2000 கொசு கடிக்கும் இரவில் , கொசுக்கள் இல்லாமல், நல்லா சாப்பிட்டு, எந்த கவலையுமில்லாமல் தூங்கியவனுக்கு இது நரகம் தான் .

ஒரு நாள் நல்ல மழை, மழையில் கொசுக்கள் இல்லை. யோசிக்காமல் அந்த பழைய பெட் ஷீட்டையும் , தலை அணையையும் எடுத்துக்கொண்டு மழை அரவணைக்க மொட்டை மாடியில் படுத்தேன், பகலெல்லாம் சைக்கிள் ஓட்டி டெலிவரி செய்த களைப்பு , சிவா அவன் வைப்பாட்டியை அழைத்து வந்து கூரையில் இருந்தது கூட தெரியாமல் உறங்கிப் போயிருந்தேன் . அடுத்த நாள் காலை, சிவாவின் மனைவி வந்தார் , ” அவன் இங்க வந்தான் அவளோட , நீ பார்க்கலயா ? நீயும் உடந்தையா ? ” என்றாள் . ஒன்றும் புரியவில்லை, பின்பு ஒரு நாளில் விஷயம் தெறிந்தது, சிரித்தேன்.

அந்த கூரையில் தான் ப்ரெஸ்ஸில் இருந்து எடுத்து வந்த பல புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் , ” அர்த்தமுள்ள ஹிந்துமதம் ” உட்பட .

40 நாட்கள் கிட்ட தட்ட ஓடி இருந்தது , விசிட்டிங் கார்ட் ஸ்கூவீஸ் போட நன்றாய் கற்று இருந்தேன் , பத்திரிக்கை கரெக்சன் பார்க்கவும் ஓரளவு , முதலாளி ஒரு ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சி, அவன் முகம் கூட நினைவில் இல்லை ஆதலால் . சம்பளம் வந்து இருந்தது, அப்படியே சிவா வாங்கிகே கொண்டார் . எனக்கு கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, 100 ரூபாய் தந்தார் . திருவான்மியூர் தியராஜாவில் “ரெட்” பார்த்தேன் . 40 நாள் கழித்து இன்டர்நெட் சென்டர் சென்று ஈமெயில் செக் செய்தேன் . அம்மா கிட்ட தட்ட சாவின் விளிம்பில் என்ற செய்தி.

கட் – அவிநாசி வீடு .

ஊரெல்லாம் , நாடெல்லாம் தேடி அலைந்து விட்டார்கள் குடும்பத்தினர் , நிறைய பேரின் தீர்க்கமான முடிவு, நான் எதோ ஒரு பெண்ணை இழுத்து கொண்டு ஓடி விட்டேன் என்று. ஈமெயில் செய்தியை பகிர்ந்த என் நண்பன் வினோத்தை போலீஸ் விட்டு விசாரணை , அவன் குடும்பமே அல்லல் பட்டது அதனால் . இதில் ஒரு சொந்தக்காரன் , மெட்றாஸில் தான் பய்யன் இருக்கிறான், ஒரு 10,000 ரூவாய் தாருங்கள், சென்று தேடிப்பிடுத்து வருகிறேன் என்று சொல்லி, அழகாய் சென்னை வந்து ஏவிஎம் ஸ்டுடியோவெல்லாம் சுத்தி பார்த்து வீடு திரும்பி இருக்கிறார் . கேரளா சென்று வெற்றிலை போட்டு பார்த்து இருக்கிறார்கள். அம்மா வெறும் அரிசியும் பருப்பும் மட்டுமே ஆக்கி வைத்து, நன்றாய் உணவு உண்ணும் தங்கையை படாத பாடு படுத்தி இருக்கிறாள் . விடாமல் அழுது இருக்கிறாள் .

சென்னை ..

அம்மா சாவின் விளிம்பில் என்ற செய்தி எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நம்மால் யாரும் இங்கே துன்ப படக்கூடாது, ஊருக்கு சென்று , நாம் செய்யும் வேலையை சொல்லி விட்டு வந்து விடலாம் என முடிவு செய்தேன் . சிவாவிடம் 300 ரூபாய் வாங்கினேன் ஊர் செல்ல . கிட்ட தட்ட சென்னை எனக்கு வழி காமித்து இருந்தது. ஒரு தள்ளு வண்டி கடை, நானும் சிவாவின் நண்பரும் போட தயார் செய்தோம், சிவா ஆட்டோவில் வரும் ஒரு IAS அதிகாரி என்னை அஸ்ஸிடண்டாக சேர்த்து கொள்ள கேட்டு இருந்தார் . ஆனால் அம்மா முக்கியம் , என்னை வாழ வைத்தவள், ஆதலால் மறுபடி புறப்பட்டேன் .

அவிநாசி …

போட்டு சென்ற அதே ஸ்கூல் பேண்ட் , ஒரு கலர் சட்டை. பேண்ட்டில் ஸ்கூவீஸ் போட்டதால் அப்பிய பெயிண்ட் , என் வீட்டிற்கு முன்னே நின்றேன். போய் சேரும் முன்பே, ஈரோட்டில் இறங்கி நான் வருவதாய் தெரிவித்து விட்டேன். கிட்ட தட்ட 50 பைக்குகள் , ஜூவில் இருக்கும் மிருகம் போல பார்த்தது ஊர் . எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, ஏனென்றால் நன்றாய் தெரியும், இதற்க்கு மேல் நான் கஷ்டப் படப் போவதில்லை என்று . எனக்கு தெரியாது – அவமானம் கஷ்டத்தை, பசியை விட கொடியது என்று .

அப்பா சிகப்புக் கயிறு கட்டி வெறிக்க பார்த்தார். அம்மா கட்டிப் பிடித்து ஓவென்று அழுகை . ” ரொம்ப அழுதேன்னா , திரும்பவும் ஊருக்கு போயிடுவேன் ” என்று மிரட்டல் விடுக்க அழுகை நிறுத்தினால் . நான் என் ஓடிப் போன கதையை வந்த ஒவ்வொருவருக்காய் சொல்ல ஆரம்பித்தேன் .

அதில் அப்பாவிற்கு நெருங்கிய – பேச்சை தொடங்கும் முன், திருக்குறள் சொல்லி தொடங்கும் ஒரு baadu என்னை தனியாய் அழைத்து போய் ” தம்பி எங்கிட்ட மட்டும் சொல், யாரை கூட்டிட்டு போனே ? ” என்று கேட்டான் . என்ன சொல்வதென்று தெரியாமல் பேசாமல் வீட்டிற்கு திரும்ப வந்தேன்.

அப்போ தொடங்கியது அவமானம் . என் பெயர் மறந்து ” ஓடிப்போன பய்யன் ” என் பெயர் ஆனது . கல்யாணத்திற்கு சென்ற பொது , என் பெரியம்மா என்னை தேடித் பிடித்து ” இவன் தானுங்க அந்த ஓடிப் போன பய்யன் ” என்றாள் ஒருவரிடம் . மனம் தினமும் ஒரு நூறு முறை லட்சங்களாய் உடைந்து கொண்டே இருந்தது .

அங்கிருந்து கிட்ட தட்ட இரண்டு வருடம், மனம் பட்ட வேதனை எனக்கும் அவிநாசி லிங்கேஸ்வரருக்கும் மட்டுமே தெரியும் . இன்று ட்ரோல்கல யெல்லாம் பார்க்கும் போது மனம் சிரித்துக் கொள்ளும். இந்த கருமத்தை நான் நிஜ உலகில் 20 வருடங்கள் முன்பே அனுபவித்து விட்டேன்.

அப்பா என்னை தினமும் ” ஐயோ உன்ன பேச கூடாது பா, அப்புறம் ஓடி போய்ட்டேனா ? ” என்பார் . ” நல்ல ரோஷமுள்ள பையன்னா இந்நேரம் தூக்கு போட்டு செத்து இருப்பான் ” என்பார் . பிரகாஷ் என்றிருந்த பெயரை பிரஷாந்த் என மாற்றினார்கள் . அந்த வலியின், அழுகையின் நடுவே புதிதாய் நான் பிறந்தேன்.

இன்று இருக்கும் அத்தனை கஷ்டத்தயும் பார்த்து சிரிக்க வைப்பது அன்றைய அனுபவம். சென்னை என் அன்னை – அவள் என்றும் எப்போதும் என்னை கைவிட்டதில்லை – இந்த புண்ணிய பூமியில் உயர்வை தவிர வேறேதும் இல்லை !

13 comments

  1. The lively feel is there is this real story. That is because of your writing skill. Really good one keep continue.

  2. படித்த எல்லாம் கண் முன் திரையாக விரிந்தது… I feel that reality.You deserve it, all is well prakash happy for you…

  3. Appreciate the courage to write this, this will definitely make few ppl think twice before making such decisions to leave home which is quite common during school days

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *